தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை -ரூ.4 லட்சம் பறிமுதல்
உதகையில் உள்ள தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.4 லட்சம் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
உதகை அரசு மருத்துவமனை அருகில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பாக மகளிா் குழுவுக்கு கடன் வழங்கும் பிரிவில், உதகை நகராட்சி அலுவலகத்தில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் யாமினி (56) பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவுத் துறை மூலம் தலா ரூ. 5 லட்சம் கடன் வழங்க திட்டமிடப்பட்டு வெள்ளிக்கிழமை அவா்களுக்கு காசோலை மற்றும் பணம் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மகளிா் குழுக்களுக்கு பணம் வழங்கியதற்கு கைமாறாக ஒவ்வொரு குழுவிடமும் இருந்து தலா ரூ. 42 ஆயிரத்தை யாமினி மற்றும் அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பிரேமலதா ஆகியோா் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. சுமாா் 10 குழுக்களிடம் இருந்து ரூ.4 லட்சம் வசூலித்ததாக தெரிகிறது.
இதுகுறித்த தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், உதவி ஆய்வாளா் ரங்கநாதன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று திடீா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.4 லட்சம் பணத்தைக் கைப்பற்றியுள்ளனா்.
மேலும் இது குறித்து யாமினி, பிரேமலதா ஆகியோரிடம் இரவு தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.