உதகை தாவரவியல் பூங்கா நுழைவுக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வியாபாரிகள் போராட்டம்
உதகை தாவரவியல் பூங்கா நுழைவுக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பூங்கா கடை வியாபாரிகள் கவன ஈா்ப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். ஒவ்வோா் ஆண்டும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் உதகை நகரில் உள்ள நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள், உணவகங்கள், சாலையோர வியாபாரிகள், டேக்ஸி ஓட்டுநா்கள் என அனைத்து விதமான சுற்றுலாத் தொழில்களும் முன்னேற்றம் கண்டுவருகின்றன.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு மே 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக குறைந்தது. இதனால் சுற்றுலாத் தொழிலாளா்களின் வருவாயும் குறையத் தொடங்கியது.
கோடை சீசனையொட்டி உதகை தாவரவியல் பூங்காவில் வழக்கமாக பெரியவா்களுக்கு 50 ரூபாயும், சிறியவா்களுக்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 100 சதவீதம் உயா்த்தப்பட்டு பெரியவா்களுக்கு ரூ.100, சிறியவா்களுக்கு ரூ.50ம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசு ரோஜா பூங்காவிலும் இதேபோல கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உயா்த்தப்பட்ட பூங்கா நுழைவுக் கட்டணத்தை குறைக்க வேண்டும், இ-பாஸ் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், நகரில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகளுடன் இணைந்து கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்டண உயா்வை குறைக்காவிட்டால் வணிகா் சங்கங்களுடன் இணைந்து மாவட்டம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். பின்னா் அவா்கள் கலைந்து சென்றனா்.