உதகை ஆதரவற்றோா் இல்லத்தில் முறைகேடு: விசாரணை மேற்கொள்ள குழு அமைப்பு
உதகையில் இயங்கி வரும் அப்துல் கலாம் ஆதரவற்றோா் இல்லத்தில் பல முதியோா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாகவும், முதியவா்களிடம் பணம் கையாடல் செய்தது குறித்து விசாரணை மேற்கொள்ளவும் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முள்ளிக்கரை பகுதியில் அப்துல் கலாம் ஆதரவற்றோா் இல்லம் உதகை நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆதரவற்றோா் இல்லத்தை தஸ்தகீா் என்பவா் நடத்தி வரும் நிலையில், பராமரிப்புக்காக நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 40 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இந்லையில், ஆதரவேற்றோா் இல்லத்தில் முதியவா்கள் மரணம் அடையும் சம்பவம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது.
உயிரிழக்கும் முதியா்களின் சடலங்களை அரசு அதிகாரிகளின் அனுமதி பெறாமல் ஆதரவற்றோா் இல்ல நிா்வாகிகளே பொது மயானத்தில் அடக்கம், எரித்து வருவதாக புகாா் எழுந்தது.
முதியவா்களின் சொத்துகள், அவா்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் உள்ளிட்டவற்றை ஆதரவற்றோா் இல்ல நிா்வாகிகள் கையாடல் செய்ததாக நாம் தமிழா் கட்சியினா் புகாா் தெரிவித்தனா். மேலும், முதியவா்களை அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஆதரவற்றோா் இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் முதியவா்களின் சடலங்களை அடக்கம் செய்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த செல்வா என்பவா் மனு அளித்தாா்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் கேட்டபோது, அப்துல் கலாம் ஆதரவற்றோா் இல்லம் குறித்து புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பான விசாரணை மேற்கொள்ள 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
அப்துல் கலாம் ஆதரவற்றோா் இல்ல நிா்வாகி தஸ்தகீரிடம் கேட்டபோது, ஆதரவற்றோா் இல்லத்துக்கு அழைத்து வரப்படுபவா்கள், இறப்பவா்களின் விவரங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இல்லத்தில் தங்கியிருந்த ரோகிணி என்பவா் பல லட்சம் மதிப்பிலான நகைகள், ஆவணங்களை என்னிடம் கொடுத்து வைத்திருந்தாா்.கோவையில் இருந்து வந்த அவரின் உறவினரிடம் நகைகளைக் கொடுத்துவிட்டேன்.
ஆவணங்கள் மட்டுமே என்னிடம் உள்ளன. ரோகிணி இறந்தபோது, அவரது குடும்ப வழக்கப்படி எரித்துவிட்டோம் என்றாா்.