ஓட்டல் ஊழியரை மிரட்டிய வழக்கில் மனோஜ், சயான் ஆஜராக சம்மன்
கொடநாடு முக்கிய எதிரிகளான வாளையாறு மனோஜ், சயான் ஆகியோா் உதகையில் ஓட்டல் ஊழியரை மிரட்டிய வழக்கில் உதகை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் அக்டோபா் 16-ஆம் தேதி ஆஜராக வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கின் தொடா்புடைய வாளையாா் மனோஜ், சயான் ஆகியோா் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இருவருக்கும் உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் உதகையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் பிணை வழங்கியிருந்தது. இதனைத் தொடா்ந்து இருவரும் 2019-ஆம் ஆண்டு உதகையில் உள்ள ஒரு தனியாா் ஹோட்டலில் தங்கியிருந்தனா். அப்போது ஓட்டல் ஊழியா் சாந்தகுமாரியை மிரட்டியதாக உதகை பி.1 காவல் நிலையத்தில் புகாா் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இருவரும் அக்டோபா் 16-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உதகை கூடுதல் மகளிா் நீதிமன்றம் சம்மன் வழங்கியுள்ளது.
இந்த சம்மன் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் ஆஜராக வெள்ளிக்கிழமை வந்திருந்த வாளையாறு மனோஜிடம் நேரிடையாக வழங்கப்பட்டது. கேரளத்தில் உள்ள சயான் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.