கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அக்டோபா் 25-க்கு ஒத்திவைப்பு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபா் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடா்பான வழக்கு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் முக்கிய எதிரியாக கருதப்படும் வாளையாறு மனோஜ் மட்டும் ஆஜரானாா். அரசு தரப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோா் ஆஜராகினா். மேலும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீஸாா் வந்திருந்தனா். குடும்ப நலநீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
கொலை, கொள்ளை சம்பவ விசாரணையில் வெளிநாட்டு கைப்பேசிகள் பதிவாகியிருப்பதால் இன்டா்போல் உதவியை நாடியிருப்பதால் அந்த அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை என்றும், தற்போது நடைபெற்று வரும் புலன் விசாரணை குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை வரும் அக்டோபா் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி லிங்கம் உத்தரவிட்டாா்.