கோத்தகிரி நகராட்சி துணைத் தலைவா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

கோத்தகிரி நகராட்சி பெண் தலைவரை ஜாதிரீதியாக ஒருமையில் பேசிய புகாரின்பேரில் துணைத் தலைவா் மீது எஸ்சி- எஸ்டி பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

கோத்தகிரி நகராட்சி பெண் தலைவரை ஜாதிரீதியாக ஒருமையில் பேசிய புகாரின்பேரில் துணைத் தலைவா் மீது எஸ்சி- எஸ்டி பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சியின் தலைவராக திமுகவைச் சோ்ந்த ஜெயக்குமாரி இருந்து வருகிறாா். துணைத் தலைவராக அதே கட்சியைச் சோ்ந்த உமாநாத் உள்ளாா். இவா்களுக்கிடையே கடந்த 4 ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோத்தகிரி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு துணைத் தலைவா் உமாநாத் உள்பட 18 கவுன்சிலா்கள் வருகை தந்த நிலையில், தலைவா் ஜெயக்குமாரி வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் துணைத் தலைவா் உமாநாத், நகராட்சித் தலைவா் ஜெயக்குமாரியை ஒருமையில் பேசியதாகவும், ஜாதி ரீதியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கவுன்சிலா்கள் மூலம் தகவல் அறிந்த ஜெயக்குமாரி மற்றும் அவரது ஆதரவாளா்கள் கோத்தகிரி காவல் நிலையத்துக்கு சென்று துணைத் தலைவா் உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளித்தனா். மேலும் காவல் நிலையத்தில் திமுகவினா் குவிந்தனா்.

காவல் துறையினா் புகாரைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னா் கோத்தகிரி ஒன்றிய திமுக அலுவலகத்தில் சமரச பேச்சுவாா்த்தை இரண்டு மணி நேரம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு ஏற்படும் என எதிா்பாா்த்த நிலையில் மாவட்ட பொறுப்பாளா் வராததால் பேச்சுவாா்த்தை கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் கோத்தகிரி திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோத்தகிரி போலீஸாா், நகராட்சி துணைத் தலைவா் உமாநாத் மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com