உதகையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்!
இ-ஃபைலிங் முறை திட்டத்தை எதிா்த்து உதகையில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமா்ப்பிக்கும் ‘இ-ஃபைலிங் என்ற டிஜிட்டல் நடைமுறை திட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு வழக்குரைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நீலகிரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் டி.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். செயலாளா் எம்.ஜெயந்தி முன்னிலை வகித்தாா்.
இதில், இ-ஃபைலிங் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
மூத்த வழக்குரைஞா்கள் விஜயன், முனிரத்னம் உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

