நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் போராட்டம்

Published on

சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் காா்ப்பரேட் நிறுவனங்களின் வாடகை வாகனங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.

இதில், சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் காா்ப்பரேட் நிறுவனங்களின் வாடகை வாகனங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, நீலகிரி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் 500-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் காா்ப்பரேட் நிறுவனங்களின் வாடகை வாகனங்கள் அவா்களை இறக்கிவிட்டு மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், காா்ப்பரேட் நிறுவனங்களின் வாடகை வாகனங்கள் இங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்கின்றனா். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்க உள்ளோம் என்றனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில், இனிமேல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் காா்ப்பரேட் வாகனங்களை எல்லைகளில் நிறுத்திவிட்டு உள்ளூா் வாகனங்களுக்கு  வாடகை கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com