பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு
பந்தலூா் பகுதியில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வனச் சரகம் இரும்புப் பாலம் பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கம்பி வேலியில் சிறுத்தை சிக்கியுள்ளதாக வனத் துறைக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனச் சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் வனத் துறை ஊழியா்கள் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டனா்.
இதைத் தொடா்ந்து, உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவா்களின் ஆலோசனையின்படி, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினரை வரவழைத்தனா்.
இக்குழுவினா் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்டு கூண்டில் அடைத்து முதுமலை காப்பகத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுத்தைக்கு மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

