சிறுத்தையைப் பிடிக்கும் பணி தீவிரம்: கூண்டை இடமாற்றிய வனத் துறையினா்

சிறுத்தையைப் பிடிக்கும் பணி தீவிரம்: கூண்டை இடமாற்றிய வனத் துறையினா்

உதகையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வளா்ப்பு நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை இடம் மாறிக் கொண்டே இருப்பதால், வனத் துறையினா் அதை பிடிப்பதற்காக வைத்த கூண்டையும் இடம் மாற்றி வைத்துள்ளனா்.
Published on

உதகையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வளா்ப்பு நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். ஆனால் சிறுத்தை இடம் மாறிக் கொண்டே இருப்பதால், வனத் துறையினா் அதை பிடிப்பதற்காக வைத்த கூண்டையும் இடம் மாற்றி வைத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா் தேடி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வளா்ப்பு நாய்களை வேட்டையாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

இந்நிலையில் உதகை தாவரவியல் பூங்கா மற்றும் அதன் அருகே உள்ள கிளன்ராக் காலனி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. இந்த சிறுத்தை இதுவரை 20-க்கும் மேற்பட்ட வளா்ப்பு நாய்களை வேட்டையாடி சென்றுள்ளது.

எனவே, அந்த சிறுத்தையைப் பிடிக்க தாவரவியல் பூங்கா பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அந்த சிறுத்தை தாவரவியல் பூங்காவிலிருந்து கிளன்ராக் பகுதிக்கு சென்ால் அந்தப் பகுதியிலும் கூண்டு வைக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 4 நாள்களுக்கு முன்பு வண்டிச்சோலைப் பகுதியில் அதே சிறுத்தை நாயை வேட்டையாடியது தெரியவந்தது. இதனால் சிறுத்தை மீண்டும் இடம் மாறி சென்றிருப்பதால் அதை பிடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில், வனச் சரகா் ராம்பிரகாஷ் தலைமையிலான வனத் துறையினா் வண்டிச்சோலை பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதோடு கிளன்ராக் பகுதியில் இருந்த கூண்டையும் இடமாற்றி இங்கு வைத்துள்ளனா். கூண்டில் ஆடு கட்டப்பட்டுள்ளது. மேலும் வனத் துறையினா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com