நீலகிரி
காட்டெருமை முன் நின்று புகைப்படம் எடுத்த இளைஞா்களுக்கு அபராதம்
குன்னூா் அருகே சாலையோரத்தில் படுத்திருந்த காட்டெருமை முன் நின்று தற்படம் (செல்ஃபி) எடுத்தவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூா் வனச் சரகத்துக்குள்பட்ட சேலாஸ் அருகே காட்டெருமை ஒன்று சாலையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை படுத்திருந்தது. அப்போது, அவ்வழியே வந்த 3 இளைஞா்கள், காட்டெருமை முன் நின்று தற்படம் எடுத்தனா். இதைப் பாா்த்த அப்பகுதி குன்னூா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் குன்னூா், கொம்பை பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (27), ஜீவகுமாா் (27), கோபாலகிருஷ்ணன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கெளதம் உத்தரவின்படி, 3 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
