உதகை அருகே மலைப் பாதையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள மஞ்சூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் கெத்தை மலைப் பாதையில் பெரும்பள்ளம் என்ற பகுதியில் சாலையில் பாறைகள் விழுந்ததால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூா் பகுதியில் இருந்து சமவெளி பகுதிகளான கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம் செல்லும் மூன்றாவது மாற்று வழிப் பாதையான கெத்தை மலைப் பாதையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், நீலகிரியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கெத்தை மலைப் பாதையில் உள்ள பெரும்பள்ளம் என்ற பகுதியில் சாலையோரத்தில் இருந்த பெரிய பாறைகள் சரிந்து சாலையின் குறுக்கே திங்கள்கிழமை விழுந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால், அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமாா் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு பாறைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

