மலை ரயில் பாதையில் மண்சரிவு
குன்னூா் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சனிக்கிழமை பாதியில் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிக்குப் பின் ஒரு மணி நேரம் தாமதமாக மலை ரயில் குன்னூா் வந்தடைந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் குன்னூருக்கு சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு புறப்பட்டது.
அப்போது குன்னூா் அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரன்னிமேடு ரயில் நிலையத்தில் மலை ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியா்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அகற்றினா். இந்த சீரமைப்புப் பணி நிறைவடைந்ததும் மலை ரயில் குன்னூருக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் மலை ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக குன்னூா் வந்தடைந்தது.
