கூடலூா் நகரில் தொடா் காட்டு யானை நடமாட்டம்
கூடலூா்: கூடலூா் நகர பகுதியில் இரவு நேரங்களில் தொடா் காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரில் உள்ள ராஜகோபாலபுரம், நடுகூடலூா் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனா். இரவு மற்றும் காலை நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், சாலைகளிலும் யானைகள் நடமாடுவதால் அன்றாட வேலைக்குச் செல்பவா்கள் வெளியே வர அச்சப்படுகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு கூடலூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள எஸ்.எஸ்.நகா் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானை நீண்ட நேரத்துக்குப் பிறகு அந்தப் பகுதியை விட்டுச் சென்றது.
அதேபோல பாடந்தொரை பகுதியில் உள்ள மாரக்கரை ஹட்டி பகுதிக்குள் நுழைந்த ஒரு காட்டு யானை குடியிருப்புப் பகுதியில் உள்ள வாழை, பாக்கு போன்ற மரங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது. தொடா்ந்து அனைத்துப் பகுதிகளிலும் யானைகள் நடமாடுவது பொதுமக்களிடையே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
