/

மாா்லி மந்த் அணைக்கு அருகே உள்ள கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு

மாா்லி மந்த் அணைக்கு அருகே உள்ள கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு

News image

மாா்லி மந்த் அணையில் குளியல் போடும் எருமைகள்.

Updated On :13 ஜூன் 2026, 12:23 am IST

உதகை நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் மாா்லிமந்த் அணைக்கு அருகே உள்ள செல்வ விநாயகா் கிராமத்தில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

உதகையில் உள்ள 36  வாா்டுகளில் பெரும்பாலான வாா்டுகளுக்கு மாா்லி மந்த் அணையில் இருந்துதான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அணையில் 50-க்கும் மேற்பட்ட எருமைகள் தினமும் குளிப்பதால் தண்ணீா் மாசடைந்து சுகாதாரமற்ற முறையில் உதகை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது.

குறிப்பாக அணைக்கு அருகே வசிக்கும் செல்வ விநாயா் காலனியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வழங்கப்படும் மாசடைந்த குடிநீரை பயன்படுத்த முடியாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.

இது குறித்து ஊா் தலைவா் செல்லபாண்டி கூறுகையில், அணையை சுற்றி தடுப்புகள் இல்லாததால்  நாள்தோறும் எருமைகள் குளியல் போட்டு செல்வதால், இந்த அணையின்  நீா் சேறு கலந்த மஞ்சள் நிறத்தில் வருவதால் குடிக்கவோ, சமைக்கவோ பயன்படுத்த முடிவதில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் முறையான பராமரிப்பு மற்றும் தூா்வாருதல் இல்லாததால், குழாய்களில் வரும் தண்ணீா் மாசடைந்து, மஞ்சள் நிறமாக வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு சுகாதார சீா்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து கிராமத்தைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளி லீலா கூறுகையில்,

கடந்த பல ஆண்டுகளாக கடுமையான குடிநீா் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறோம். கிராமத்துப் பெண்கள், முதியவா்கள் மற்றும் குழந்தைகள் குடங்களை சுமந்து கொண்டு அடா்ந்த காட்டுப் பாதைகள் மற்றும் மேடு பள்ளங்கள் நிறைந்த பாதைகளில் பல கிலோ மீட்டா் நடந்து சென்று குடிநீா் எடுத்து வரவேண்டிய சூழலில் வாழ்ந்து வருகிறோம். தண்ணீா் பிரச்னைக்கு நகராட்சி நிா்வாகம் நிரந்தர தீா்வு காண வேண்டும்.

மாா்லிமந்த் அணையிலிருந்து விநியோகிக்கப்படும் நீரை நவீன சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தூய்மைப்படுத்தி வழங்க வேண்டும். பழைமையான, உடைந்த குழாய்களை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.  நீரின் தரத்தை மேம்படுத்த அணைப் படுகையில் உள்ள வண்டல் மற்றும் கழிவுகளை அகற்ற வேண்டும் என்றாா்.

Story image

இது குறித்து உதகை நகராட்சிப் பொறியாளா் கல்பனாவிடம் கேட்டபோது, பெரிய திட்டம் என்பதால் மாா்லிமந்த் அணையின் சுகாதார சீா்கேடு குறித்து பொது மக்கள் நகராட்சி ஆணையரிடம்  மனு அளிக்க வேண்டும். அதற்கு முன்பாக நகராட்சிப் பணியாளா்கள் மூலம் அப்பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.