வெள்ளக்கோவில் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம், பொய்யேரி மேட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் வி.முருகேசன் (41).விவசாயி. இதே ஊரைச் சேர்ந்தவர் த.பாலசுப்பிரமணியம் (48). நகராட்சி கவுன்சிலர். முன்விரோதம் காரணமாக தனது தோட்டத்திலிருந்த மின் மோட்டார் அறை, பாசன பைப் லைன்களை உடைத்து சேதப்படுத்தியதாக பாலசுப்பிரமணியம் மீது முருகேசன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கு திருமங்கலத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் தென்னை, இலவ பஞ்சு மரத் தோப்பு உள்ளது. எங்களது ஊர் கோவில் பணத்தை மோசடி செய்தது குறித்து பாலசுப்பிரமணியத்திடம் கணக்குக் கேட்ட வகையில் இருவருக்குமிடையே விரோதம் ஏற்பட்டது. இதனால், பழிவாங்கும் நோக்கில் மற்றொரு உள்ளூர்காரர் ராஜ்குமாருடன் சேர்ந்து எனது சொத்துகளைச் சேதப்படுத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தோட்டத்து மின் மோட்டார் அறை, மின் சாதனங்கள், பாசன பைப் லைன், கேட் வால்வுகளை உடைத்துவிட்டனர். இதை வேலையாள் பாபு பார்த்துள்ளார். எனவே, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பாலசுப்பிரமணியம், ராஜ்குமார் இருவர் மீதும் வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.