வெள்ளக்கோவில், முத்தூர் அருகே வியாழக்கிழமை கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மயிலை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
முத்தூர், மணிவாசகபுரம், வேலாங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் ரா.சதாசிவம்(50). இப் பகுதியில் தேசியப் பறவையான மயில் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. இந் நிலையில், சுமார் 70 அடி ஆழமுள்ள தனது தோட்டக் கிணற்றில் மயில் தவறி விழுந்து உயிருக்குப் போராடி வருவதாக வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு சதாசிவம் தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற நிலைய அலுவலர் செங்குட்டுவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் 5 அடி ஆழத்துக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. கயிறு மூலமாக கிணற்றுக்குள் இறங்கி நீண்ட நேரம் போராடி மயிலை மீட்டனர்.
மீட்கப்பட்ட மூன்று வயதுடைய இந்த ஆண் மயில், தாராபுரம் வனத் துறை அதிகாரிகள் செல்வராசு, குறிஞ்சிவேந்தன் வசம் ஒப்படைக்கப்பட்டது. காயங்களுக்கு மருந்துபோட்ட பிறகு காட்டுப் பகுதியில் விடப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.