சிறப்புக் காவல் இளைஞர் படைக் காவலரை கத்தியால் குத்திய நபரை பொது மக்கள் உதவியுடன் துரத்திப் பிடித்த போக்குவரத்துக் காவலருக்கும்,
கத்திக்குத்துப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த இளைஞர், போலீஸ் நண்பர் குழுவைச் சேர்ந்தவருக்கும் மாநகர காவல் ஆணையர் சேஷசாய் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சிறப்புக் காவல் இளைஞர் படைக் காவலர் ஜெகதீஷ் கண்ணன் (20) என்பவர் புதன்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அவருக்கும் சாலையைக் கடக்க முயன்றவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், கத்தியால் ஜெகதீஷ் கண்ணன் முகம், வயிற்றில் குத்தினார். கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, சம்பவ இடத்தில் இருந்த முருகேசன் என்பவரும், போலீஸ் நண்பர் குழுவைச் சேர்ந்த அசோக்குமாரும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந் நிலையில், ஜெகதீஷ் கண்ணனை கத்தியால் குத்திய கதிரேசன் என்பவரை பொதுமக்கள் உதவியுடன் போக்குவரத்துக் காவலர் கோபிநாத் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இச் சம்பவத்தில் குற்றவாளியை துரிதமாகச் செயல்பட்டு பிடித்த கோபிநாத்துக்கும், ஜெகதீஷ் கண்ணனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, அவர் உயிர்பிழைக்க உதவிய முருகேசன், அசோக்குமாருக்கும் மாநகர காவல் ஆணையர் சேஷசாய் வெகுமதி அளித்துப் பாராட்டினார்.