சாயக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டம் கைவிட்டப்பட்ட நிலையில், அதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்த ரூ.200 கோடியை திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்க வேண்டும் என்று, மத்திய ஜவுளி ஆணையர் கிரண்சோனி குப்தாவிடம் சாய ஆலைகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய ஜவுளி ஆணையாளர் கிரண்சோனி குப்தா, திருப்பூரில் அருள்புரம் சாயக்கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத்தை வியாழக்கிழமை பார்வையிட்டார்.சாய ஆலைகள் சங்கத் தலைவர் நாகராஜ், அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாக இயக்குநர் செல்வக்குமார், பொது மேலாளர் கஜேந்திரன் ஆகியோர் பூஜ்ஜிய சதவீத தொழில்நுட்பத்தில் சாயக்கழிவு நீரை வெளியேற்றாமல் சுத்திகரிக்கும் நவீன தொழில்நுட்ப முறைகள் திருப்பூரில் கையாளப்படுவது குறித்து விளக்கினர்.
அதன் பின் மத்திய ஜவுளி ஆணையர் கிரண்சோனி குப்தாவிடம் சாய ஆலைகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, சாய ஆலைகள் சங்கத் தலைவர் நாகராஜ் கூறியது: திருப்பூர் சாயக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சுத்திகரிப்புக்கான நவீனத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதில், அதிகளவில் செலவு ஏற்படுகிறது. எனவே, கடலில் கலக்கும் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியிருந்த ரூ.200 கோடியை, திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்க வேண்டும்.
ஜவுளித் துறையின் தொழில்நுட்ப மேம்பாடு நிதி திட்டத்தில் பொது சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் சேர்த்து நிதி உதவி அளிக்க வேண்டும். கடந்த மத்திய பட்ஜெட்டில் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு இந்தியா முழுவதுமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில் இதற்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றார்.