பிளஸ்-2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவமனை முன் அந்த மாணவியின் உறவினர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பலவஞ்சிபாளையம் வேலவன் நகரைச் சேர்ந்தவர் மனோகரன் (42). அதே பகுதியில் ஹோட்டல் வைத்துள்ளார். அவரது மனைவி சுசீலா (35). மகள்கள் சுவாதி (17), கிருத்திகா (15), சுமித்ரா (13), மகன் வாசு (8).
திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுவாதி 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந் நிலையில், மனோகரன் தனது மனைவி, மகனுடன்
செவ்வாய்க்கிழமை வெளியூர் சென்றிருந்தார். வீட்டில், சகோதரிகள் 3 பேரும் இருந்துள்ளனர். இந் நிலையில், வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் பால்கார பெண் அந்த வீட்டிற்குச் சென்றபோது, சமையலறையில் சுவாதி தூக்கிட்ட நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், சுவாதியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
தற்கொலை செய்து கொண்ட சுவாதியின் புத்தகப் பையில் அவர் எழுதிய கடிதம் இருந்தது. அதை போலீஸார் கைப்பற்றினர். அதில், பள்ளித் தலைமையாசிரியர், மற்றொரு ஆசிரியை மீது குற்றஞ்சாட்டி, தனது முடிவுக்கு ஆசிரியர் மட்டும் முழுக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று அந்த மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் ஆறுதல் கூறி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந் நிலையில், அரசு மருத்துவமனை முன் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுவாதியை தற்கொலைக்குத் தூண்டிய ஆசிரியர்களை கைது
செய்ய வலியுறுத்தினர். அவர்களிடம், மாநகர காவல் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு, வட்டாட்சியர்
பூபதி ஆகியோர் பேச்சு நடத்தினர். அதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டனர்.