உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர்கள், திருப்பூரில் சோதனையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (உணவுப் பிரிவு) மாவட்ட நியமன அலுவலர் ஓ.எல்.எஸ்.விஜய் தலைமையில் அத் துறை அலுவலர்கள், மாநகரில் பழைய பேருந்து நிலையம், அரிசிக்கடை வீதி, கே.எஸ்.சி. பள்ளி வீதி, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் சோதனையிட்டனர்.
இதில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் வெள்ளியங்காடு பாறைக்குழி குப்பைக் கிடங்கி பகுதியில் புதைக்கப்பட்டது. மேலும், தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருள் பாக்கெட்களை விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.