ராஜகம்பீரத்தில் சிவன்மலை கோவில் ராஜகோபுரம்

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 10 வருடங்களுக்குப் பின், ராஜகோபுரத்தின் திரை விலக்கப்பட்டு பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்தனர்.
Published on
Updated on
1 min read

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 10 வருடங்களுக்குப் பின், ராஜகோபுரத்தின் திரை விலக்கப்பட்டு பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்தனர்.

காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசாமி மலைக் கோவில் உள்ளது. தமிழக அளவில் உள்ள 36 பெரிய கோவில்களில் ஒன்றான இக் கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பிரதான கோவிலான இதை, தமிழக அரசு சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது. இங்கு தினசரி நடைபெறும் தங்க ரத உலா மிகவும் சிறப்பு பெற்றது.

இக் கோவிலின் குடமுழுக்கு 12 வருடங்களுக்குப் பின், வரும் ஜூலை 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந் நிலையில், இக் கோவிலில் திரையிட்டு மூடப்பட்டிருந்த ராஜகோபுரம் தற்போது திரை விலக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

புகழ்பெற்ற இக் கோவிலில் ராஜகோபுரம்

இல்லாத நிலை இருந்தது. பக்தர்களின் பல்லாண்டு வேண்டுகோளுக்கிணங்க, கோவில் நிர்வாகம் சார்பில் 2003-ஆம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.37 லட்சம் செலவில் ராஜகோபுரம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

2004-இல் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஒப்புதல் வழங்கியதையடுத்து, அந்த ஆண்டே ராஜகோபுரம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

கட்டுமானப் பணிக்குத் தேவையான கருங்கற்கள் சேலம், ராசிபுரத்தில் இருந்து தருவிக்கப்பட்டன. ராஜகோபுரத்துக்குத் தேவையான கதவுகளை திருப்பூர் தொழில் அதிபர் ஒருவர் செய்து கொடுத்துள்ளார். அழகிய கலைநயம் கொண்ட இந்த தேக்கு மரக் கதவுகள், கடந்த ஆண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன.

5 நிலைகள் மற்றும் 57 அடி உயரம் கொண்ட இந்த ராஜகோபுரம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டாலும், குடமுழுக்கு விழாவுக்காக வர்ணம் பூசப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்தது. பின்னர், கோபுரத்துக்கு வர்ணம் பூசப்பட்டு தென்னை ஓலைகளால் முழுவதும் மூடப்பட்டிருந்தது. தமிழக அரசு உத்தரவின்படி, தென்னங்கீற்றுகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட திரை கொண்டு மறைக்கப்பட்டது.

இதன் பின்னர் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந் நிலையில், திரையிட்டு மூடப்பட்டிருந்த ராஜகோபுரத்தின் திரைகள் கடந்த வாரம் அகற்றப்பட்டு, வர்ணத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது சுப்பிரமணியசாமி கோவில் ராஜகோபுரம். பல ஆண்டுகளாக மூடியே வைக்கப்பட்டிருந்த இந்த ராஜகோபுரத்தை, தற்போது பக்தர்கள் பரவசத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

வரும் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, இந்த ராஜகோபுரத்தின் மீது ஹெலிகாப்டர் மூலமாக புனித நீர்

தெளிக்கவும், பூத் தூவவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com