Enable Javscript for better performance
இன்றுமுதல் எவர்சில்வர் பாத்திரப் பட்டறைகள் மூடல்- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளர்களுக்கு 25 சதவீத கூலி உயர்வு கொடுத்து, தொழிலை நடத்த இயலாது எனக்கூறி, வியாழக்கிழமை (இன்று) முதல் எவர்சில்வர் பாத்திரப்பட்டறைகளை மூடுவது என அதன் உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் புதன்கிழமை முடிவு செய்யப்பட்டுள்ளது.

      திருப்பூர் அனுப்பர்பாளையம், சுற்றுப்பகுதிகளில் உள்ள செம்பு, பித்தளை, எவர்சில்வர் பாத்திரப்பட்டறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கோரி 8 தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு போராடி வருகிறது.

     இந்நிலையில், கோவை தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்னிலையில் பித்தளை, செம்புப் பாத்திர உற்பத்தித் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வுப் பேச்சு வார்த்தையில், 33.5 சதவீத கூலி உயர்வு வழங்க ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர்.

     அதேசமயம், எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு பேச்சில் இழுபறி நீடித்து வந்தது. எவர்சில்வர் பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு 25 சதவீத கூலி உயர்வு வழங்குமாறு கோவை தொழிலாளர் துறை இணை ஆணையர் அறிவுறுத்தியிருந்தார். இதை தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஏற்றுக்கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் இது தொடர்பாக விளக்கம் கூறி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டன.

     அதேசமயம் 25 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க இயலாது என எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் மறுத்துவிட்டது. இந்நிலையில், இத்தொழிலாளர்கள் வேலைக்கு சென்ற நிலையில், 20 சதவீத கூலி உயர்வு மட்டும் தர இயலும் என உரிமையாளர்கள் கூறியதாகவும், அதனால், தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து திரும்பியதாகவும் தெரிகிறது.

     இதையடுத்து, தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில், 25 சதவீத கூலி உயர்வு தர மறுக்கும் எவர்சில்வர் பாத்திரப் பட்டறைகள் முன் வரும் 28-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டமும் நடைபெற்றது.

    ÷இச்சங்கச் செயலாளர் எஸ்.வேலுச்சாமி கூறியது:

     தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவும், எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கமும் கூலி உயர்வு தொடர்பாக பேசி, இறுதி முடிவு எடுக்கும் வரை, எவர்சில்வர் பாத்திரப் பட்டறைகளில் உற்பத்தியை நிறுத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai