Enable Javscript for better performance
தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்: தேமுதிக வேட்பாளர்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயம், தொழில்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி, திருப்பூர் மக்களவைத் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன் என்று தேமுதிக வேட்பாளர் என்.தினேஷ்குமார் கூறினார்.

     திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் என்.தினேஷ்குமார் போட்டியிடுகிறார். இதற்காக, திருப்பூரில் பி.என்.சாலை மில்லர் பேருந்து நிறுத்தப் பகுதியில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை பாஜக திருப்பூர் மாவட்டத் தலைவர் மணி திறந்து வைத்தார்.

      அதன்பின், ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக திருப்பூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சின்னச்சாமி, மதிமுக மாநகரச் செயலாளர் சிவபாலன், கொமதேக மாவட்டச் செயலாளர் ரோபோ ரவி, பாமக மாநில துணைப்பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் தனபால், காந்திய மக்கள் கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, புதிய நீதிக்கட்சி மாநில அமைப்பாளர் வெங்கடாசலம், தேமுதிக மாநில மகளிர் அணி செயலாளர் சிவகாமி, சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தினகரன், உயர்மட்டக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.அக்பர், கவுன்சிலர் கோவிந்தராஜ், தேமுதிக நிர்வாகிகள் பழனிச்சாமி, கண்ணன், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

       இதில், வேட்பாளர் தினேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளன. அதிமுக, திமுக இரு திராவிடக் கட்சிகளுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை.

     திருப்பூர் பகுதியில் விவசாயம், தொழில்கள் பின்தங்கியுள்ளன. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் விவசாயம், தொழில்கள் மேம்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கும் நரேந்திரமோடியின் மூலமாக நிறைவேற்றித்தர பாடுபடுவேன். மாதத்தில் தலா ஒருநாள் வீதம் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து, அதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியை மேற்கொள்வேன். இத்தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதி ஆக மாற்றுவேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai