Enable Javscript for better performance
அனைத்து ரயில்களிலும் பார்சல் சேவை மீண்டும் தொடக்கம்: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து ரயில்களிலும் பார்சல் சேவை மீண்டும் தொடக்கம்: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்துவித ரயில்களிலும் பார்சல் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூரிலிருந்து பல்வேறு வெளிமாநிலங்கள், வெளியூர்களுக்கு சரக்குகள் ரயில் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்து வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், இங்கிருந்து சரக்கு மற்றும் பார்சல்கள் தூத்துக்குடி எடுத்து செல்லப்பட்டு, கடல் வழி போக்குவரத்து வழியாகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
    திருப்பூர் ரயில் நிலையத்தைப் பொருத்தவரை, அனைத்து விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் நின்று செல்கின்றன. ஏற்கெனவே திருப்பூரிலிருந்து அனைத்துவித ரயில்கள் மூலமாக சரக்கு மற்றும் பார்சல்கள் அனுப்பப்பட்டு வந்தன.
    ஆனால், விரைவு ரயில்கள் திருப்பூரில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் காரணத்தால், சரக்குகள் ஏற்றும் அளவுக்கு போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி, திருப்பூரிலிருந்து இரு விரைவு ரயில்கள் தவிர, பிற விரைவு ரயில்களில் பார்சல் ஏற்றுவதற்கு கடந்த ஆண்டு ரயில்வே துறை ஒப்புதல் அளிக்கவில்லை.
    இதனால், ரயில்களில் பின்னலாடை மற்றும் சரக்குகளை அனுப்ப தொழில் துறையினர் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக தொழில்துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் சார்பில் திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து அனைத்து ரயில்களிலும் சரக்குகள் மற்றும் பார்சல்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்க கோரி ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
    இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்துக்கு ஹிந்த் மஸ்தூர் சபாவும் (எச்எம்எஸ்) கோரிக்கை மனு அளித்தது.
    இந்நிலையில், முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் ஒரு மாத காலத்துக்கு திருப்பூரிலிருந்து அனைத்து ரயில்களிலும் சரக்குகள், பார்சல்களை அனுப்ப ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை இந்த சேவை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
    இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், அனைத்து ரயில்களிலும் சரக்குகள் அனுப்ப முடியாத சூழலில் ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது வருவாயைக் கருத்தில் கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் இதன் வெற்றி மற்றும் ரயில்கள் செல்லும் கால அளவுகளை வைத்து, சேவையைத் தொடருவது குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai