அவிநாசி அருகே பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே, பழுதான தனியார் பள்ளி வாகனத்தை பெற்றோர், பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்தனர்.
அவிநாசி-மங்கலம் சாலையில், தேவராயம்பாளையம் பிரிவில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு இப்பள்ளி புதன்கிழமை திறக்கப்பட்டது.
இப்பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன் இப்பள்ளி வேன் வேலாயுதம்பாளையம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, இந்த வாகனத்தின் இயந்திர அச்சு முறிந்து, பெரும் சப்தத்துடன் வந்துகொண்டிருந்தது. இதை அறிந்த பொதுமக்கள், பெற்றோர் அந்த வாகனத்தை சிறைபிடித்தனர்.
தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர், மாற்று வாகனத்தில் மாணவ, மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே நிகழ்ந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு: மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது. பள்ளி வாகனங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா அல்லது கண்துடைப்புதானா என்ற சந்தேகம் எழுகிறது. இப்பள்ளி வாகனத்தை ஆய்வு செய்த அவிநாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.