பிரசித்தி பெற்ற திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
நடப்பு ஆண்டு வைகாசி விசாகத் தேர்த் திருவிழா கடந்த மே 31-ஆம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகிய நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. விசாலாட்சியம்மை உடனமர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி திருவீதி உலாவும், பூமி நீளாதேவித் தாயார், கனகவல்லித் தாயார் உடனமர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருவீதி உலாவும் நடைபெற்றன. அதிகார நந்தி, சேஷ வாகனம், கற்பகவிருட்சத்தில் சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, பெருமாள் கருட சேவை நிகழ்வுகளும் நடைபெற்றன.
தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விஸ்வேஸ்வரர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. திருத்தேரை சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார் ஆகியோர் வடம் பிடித்துத் தொடக்கிவைத்தனர்.
இந்து சமய அறநிலையத் துறையினர், கட்டளைதாரர்கள், ஊர் பிரமுகர்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஈஸ்வரன் கோயில் வீதி, அரிசிக் கடை வீதி, காமராஜர் வீதி, பூ மார்க்கெட் பகுதி வழியாக பவனி வந்த தேர், பெருமாள் கோயில் மைதானத்தில் நிலையை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொது மக்களுக்காக குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மாநகர போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை (ஜூன் 8) ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.