குடிநீர் கேட்டு முத்தூர் சின்னமுத்தூர் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை மூன்று இடங்களில் சாலை மறியல் செய்தனர்.
முத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சின்னமுத்தூர் சாலையில் உள்ளது பெருமாள்புதூர். இங்குள்ள இரண்டு தனிநபர்கள் தங்களுடைய இடத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீரை லாரிகள், டிராக்டர்கள் மூலமாக விற்பனை செய்து வருவதாகத் தெரிகிறது. இதனால் அருகிலுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்து விட்டது.
இதனால் பெருமாள்புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்களுக்கு கடந்த 4 மாதங்களாகக் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கொடுமுடி சாலையில் சின்னமுத்தூர் பிரிவு, பேருந்து நிலையம் அருகில், முத்தூர் கடைவீதி ஆகிய 3 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் முத்தூருக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
சம்பவ இடத்துக்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள், நில வருவாய் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்
தண்ணீர் விற்பனை குறித்து ஆய்வு செய்யப்படும். சீரான குடிநீர் விநியோகம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
ந.கரையூரில்...: முத்தூரை அடுத்த வேலம்பாளையம் ஊராட்சி ந.கரையூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 மாத காலமாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் முத்தூர் - வெள்ளக்கோவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குருவம்மாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.