பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படும்: உற்பத்தியாளர்-தொழிற்சங்கத்தினர் கூட்டத்தில் முடிவு

பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று திருப்பூரில்
Published on
Updated on
2 min read

பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று திருப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற தொழில் துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் கா.ஜெகதீசன் தொழில் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பெண் தொழிலாளர்களுக்கென ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தனியாக பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டி அமைப்பதற்கான அறிவிப்பை தொழிற்சாலை அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும். அத்துடன் கமிட்டி அமைத்து, அதிலுள்ள உறுப்பினர் உள்ளிட்ட விவரங்களை தொழிலகப் பாதுகாப்பு துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
பீஸ் ரேட் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போனஸ், விடுமுறை சம்பளம், ஈட்டிய விடுப்பு மற்றும் பண்டிகை சம்பளம் முறையாகக் கணக்கிட்டு வழங்க வேண்டும். சட்ட விதிமுறைப்படி காலாண்டுக்கு 75 மணி நேரத்துக்கு மிகாமல் மிகைநேர பணி இரட்டிப்புச் சம்பளத்துடன் அனுமதிக்கலாம். அதற்கு கூடுதல் மிகைநேரப் பணி கூடாது.
விடுமுறை நாள்களில் வேலை வாங்குவது கூடாது. அசாதாரணமான சூழலில், தொழிலகப் பாதுகாப்பு துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று, இரட்டிப்புச் சம்பளத்துடன் வார விடுமுறை நாளில் வேலை வாங்கலாம். ஆனால் அதுவும் வழக்கமான நிகழ்வாக இருக்கக் கூடாது. தேசிய, பண்டிகை விடுமுறை நாள்களில் வேலை வாங்கக் கூடாது.
உற்பத்திப் பணியில் ஒப்பந்தமுறை கூடாது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தும்போது, அவர்களது விவரம், அடையாளச் சான்று ஆகியவற்றைப் பெற்று, இணை இயக்குநரிடம் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் ஈ.எஸ்.ஐ., பி.எப். வசதிகளை அமல்படுத்த வேண்டும். இதர தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக தொழில் துறையினர் சார்பில் தொழிற்சங்கங்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை புதன்கிழமை நடத்தப்பட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும், சட்ட நடைமுறைகளை அமல்படுத்த ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் துறையினர் சார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிஐடியூ பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறுகையில், "தொழிற்சாலைகளில் தொழிலாளர் சட்டங்களை அமலாக்க நடவடிக்கை எடுப்பதாக ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சிலர் இந்த சட்டங்களை அமல்படுத்தாத போக்கு தொடர்ந்து இருக்கிறது. எனவே, இந்த சட்டங்களை அனைத்து தொழிற்சாலைகளிலும் உறுதியாக அமல்படுத்தகோரி, வரும் ஜூன் 20-ஆம் தேதி சென்னையில் தொழிலாளர் துறை செயலாளரை சந்தித்து பேச, அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், திருப்பூரின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தலா ஒரு இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட வேண்டும், என்று இருதரப்பு சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com