பதவி உயர்வு அரசாணையை அமல்படுத்தக்கோரி திருப்பூரில் தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினர் சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் 25 முதல் 28 ஆண்டுகள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறும் நிலையுள்ளது. கால்நடை மருத்துவப் பணிகளோடு மக்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தும், இலவச கால்நடைகள் வழங்குதல், வைக்கோல் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் நாங்களே செயல்படுத்தியும் வருகிறோம்.
இந்த பங்களிப்பினை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மூன்று கட்ட பதவி உயர்வினை உறுதி செய்யும் பதவி நிலை விருத்தி ஆணையைப் பிறப்பித்தது. தற்போது இந்த அரசாணையை நிறுத்தி வைக்க நிதித்துறை பரிந்துரைத்துள்ளது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினர் கூறுகையில், "எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 14-ஆம் தேதி (புதன்கிழமை) கால்நடை மருத்துவர்கள் அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் மேற்கொள்கிறோம். இந்தப் போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவ பணியாளர்கள் என 86 பேர் பங்கேற்றறுள்ளனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.