தாராபுரம் நகரில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதன்காரணமாக ஒரு குடம் குடிநீர் ரூ. 5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நகரில் மொத்தமுள்ள 30 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. தற்போது காவிரி மற்றும் அமராவதி குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காவிரியிலிருந்து தினசரி 40 முதல் 50 லட்சம் லிட்டர் வரை குடிநீர் பெறப்பட்டு வந்தது. இவற்றுடன் அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததாலும், அமராவதி அணை வறண்ட நிலையில் காணப்படுவதாலும் ஆற்றுக்கு தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அமராவதி ஆறு முற்றிலும் வறண்ட நிலையில் காணப்படுகிறது.
இதேபோல் காவிரி ஆறு வறண்டுபோனதாலும், குடிநீர் கொண்டு வரும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாலும் காவிரி கூட்டுக் குடிநீர் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது காவிரியிலிருந்து தினசரி 10 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே பெறப்படுகிறது. இதேபோல் அமராவதி ஆற்றில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 10 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே பெற முடிகிறது.
இதன்காரணமாக நகரில் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் வழங்குவதில் கடந்த 4 மாதமாகவே சிக்கல் நிலவி வருகிறது. இடையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஓரளவுக்கு குடிநீர்த் தட்டுப்பாட்டை நகராட்சி நிர்வாகம் சீரமைத்தது. தற்போது, அமராவதி ஆறு முற்றிலும் வறண்டுள்ளதால் மீண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீர் விற்பவர்கள் விலையை இருமடங்கு உயர்த்தியுள்ளனர். கடந்த மாதம் 7 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி குடிநீர் ரூ. 1,100-க்கு விற்பனையானது. தற்போது ரூ. 2,300 வரை விற்கப்படுகிறது. இதுதவிர மினி ஆட்டோ மற்றும் சைக்கிள்களில் குடம் குடிநீர் ரூ. 5 வரை விற்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: நகரில் நிலவும் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் உத்தரவை மீறி லாரிகளில் விற்கப்படும் குடிநீரைத் தடை செய்ய வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.