காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள பொதுக்குளத்தை தூர்வாருவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு வேர்கள் அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் எஸ்.ஜெயந்தி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார். புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் காங்கயத்தில் உள்ள வேர்கள் அமைப்பினர், சிவன்மலையில் உள்ள பொதுக்குளத்தை தூர்வாருவதற்கு ஆட்சியரிடம் அனுமதி வேண்டி மனு அளித்தனர்.
அதில், சிவன்மலை கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது மலைக் கோயிலுக்குப் பின்புறம் உள்ள ஆத்தாகுளம் ஆகும். இந்தக் குளத்தைச் சுற்றி பலர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்தக் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இந்நிலையில், சிவன்மலை ஊர்மக்கள், காங்கயம் வேர்கள் அமைப்பின் சார்பில் இந்தக் குளத்தை தூர்வார முடிவு செய்துள்ளோம். எனவே, இந்தக் குளத்தை தூர்வார அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஜெயந்தி, இதுகுறித்து காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கலந்து பேசி, பின்னர் அனுமதி வழங்கப்படும். குளத்தை தூர்வாரும்போது கிடைக்கும் மண்ணை விற்பனை செய்யக் கூடாது. அதனை விவசாயப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.