தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் துணை நிறுவனத்தில் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவன முன்னாள் அதிகாரியை மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
இந்த் பேங்க் மெர்ச்சன்ட் பேங்கிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தின் திருப்பூர் முனையத்தின் பொறுப்பாளராக இருப்பவர் என்.ஜெயக்குமார். இவர், சில தினங்களுக்கு முன் திருப்பூர் மாநகர மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அதில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி, திருமலைக்கவுண்டர்பாளையம், கொள்ளேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் கே.தேவராஜ். இவர், இந்த் பேங்க் மெர்ச்சன்ட் நிறுவனத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை முனையத்தின் பொறுப்பாளராக பணி செய்துள்ளார்.
இந்நிலையில், பணிக் காலத்தில் நிறுவன முதலீட்டாளர்கள் 5 பேருக்கு உரிய ரூ. 26 லட்சத்து 35 ஆயிரத்து 384 மதிப்புள்ள வேறு கணக்குகளில் செலுத்த வேண்டிய பங்குகளை, அவரே சுயமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பு ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேவராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.