டிராக்டர் ஜப்தியால் பல்லடத்தில் விவசாயி தற்கொலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம்,  மலையம்பாளையத்தில் வங்கிக் கடனுக்கு டிராக்டரை ஜப்தி செய்ததால் பூச்சி மருந்து குடித்து விவசாயி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம், பல்லடம்,  மலையம்பாளையத்தில் வங்கிக் கடனுக்கு டிராக்டரை ஜப்தி செய்ததால் பூச்சி மருந்து குடித்து விவசாயி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம் ஒன்றியம்,  கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் கிராமம் மணியகாரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளிங்கிரிநாதன் (60). இவர்  திருப்பூர் தனியார் வங்கியில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு  ரூ. 25 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்குவதற்காக ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.  6 மாதத்துக்கு ஒரு முறை ரூ. 60 ஆயிரம் வீதம் ரூ. 1லட்சத்துக்கு மேல் தவணைத் தொகை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் தவணைத் தொகை செலுத்தவில்லையாம்.
இதையடுத்து, வங்கி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை அணுகி டிராக்டரை ஜப்தி செய்ய அண்மையில் உத்தரவு பெற்றுள்ளது. இந்த நிலையில்,  வங்கி நிர்வாகத்தினர் பல்லடம் போலீஸார் துணையுடன் மலையம்பாளையம் சென்று  டிராக்டரை  புதன்கிழமை ஜப்தி செய்துள்ளனர்.   டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டதால் மனவேதனை அடைந்த விவசாயி வெள்ளிங்கிரிநாதன்,  பல்லடம் அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை உயர் சிகிச்சைக்கு திருப்பூர் அல்லது கோவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்துள்ளனர். இந்த நிலையில் பல்லடம் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக வெள்ளிங்கிரிநாதன் சடலம்  பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட வெள்ளிங்கிரிநாதனுக்கு பேபி (எ) சரோஜா (45) என்ற மனைவியும்,  ஞானசிவம் (15) என்ற மகனும் உள்ளனர். விவசாயி தற்கொலை பற்றி தகவல் அறிந்தவுடன் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து, மாவட்ட நிர்வாகிகள் வாவிபாளையம் வெங்கடாசலம்,  சோமசுந்தரம்,  மாவட்ட திமுக துணைச் செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து கூறுகையில்,  "வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி வெள்ளிங்கிரிநாதன் தற்கொலைக்கு உரிய நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம். வெள்ளிங்கிரிநாதன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.  தற்கொலைக்கு காரணமான வங்கி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com