சமையலர் பாப்பாள் குடும்பத்தினருக்கு பாதுகாப்புக் கோரி ஆட்சியரிடம் மனு

அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி சமையலர் பாப்பாள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி
Published on
Updated on
2 min read

அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி சமையலர் பாப்பாள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அவரது கணவர் சி.பழனிசாமி மாவட்ட ஆட்சியரிடம்  திங்கள்கிழமை மனுஅளித்தார்.
வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு  ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், அவிநாசி அருகே உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிச் சமையலர் பாப்பாளின் கணவர் சி.பழனிசாமி, ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது:  
நாங்கள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனது மனைவி பாப்பாள் ஒச்சாம்பாளையம் பள்ளியில் இருந்து திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சமையலராகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். பள்ளியில்  உள்ள சில குழந்தைகளின் பெற்றோர் ஜூலை 16, 17,18 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு வந்து பாப்பாளை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதுடன், அவர் சமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இது தொடர்பாக எனது மனைவி பாப்பாள் சேவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 87 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 
இந்நிலையில், எனது உறவினர் வெங்கிட்டானுடன் எங்கள் வீட்டில் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக கூறிச் சென்றார். இதனால் ஊருக்குள் வசிக்கவே அச்சமாக உள்ளது.  
இச்சம்பவத்தால் எனது குடும்பத்தாருக்கும், உறவினர் வெங்கிட்டான் குடும்பத்தாருக்கும் காவல் துறையின் பாதுகாப்பு தேவைப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.  
திருப்பூரை சேர்ந்த பக்தர்களின் உறவினர்கள் அளித்த மனு விவரம்:  
திருப்பூர் வள்ளலார் டிரஸ்ட் மூலமாகத் திருப்பூர், நாமக்கல், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் 23 பேர் நேபாளத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஜூலை 23ஆம் தேதி புனித யாத்திரை மேற்கொண்டனர். 
இதில், 22 பேர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது. இந்நிலையில், அங்கு தரிசனம் முடிந்ததும் மோசமான வானிலை நிலவியது. இதனால் கைலாஷ் அருகே சிமிகோட்டில் உள்ள விடுதியில் அனைவரும் தங்கியிருந்தனர். தற்போது நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமான வானிலை நிலவுவதால், அவர்கள் தமிழகம் வருவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. 
எனவே, அவர்களை உடனடியாக பத்திரமாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . இதையடுத்து, பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடித் தீர்வு காண துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், இக்கூட்டத்தில் 41 பயனாளிகளுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.