திருப்பூரில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய இருவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம், பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பட்சாரா மகன் முகமது ரோணி (34). இவர், திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை, கணியாம்பூண்டி பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக (கட்டிங் மாஸ்டர்) வேலை செய்து வந்தார். இவரது குடியிருப்பின் அருகில் மேற்குவங்கத் தொழிலாளர்கள் பலர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கணியாம்பூண்டி பகுதியில் முகமது ரோணி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் ரோணியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாகவும், பனியன் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலாலும் அவர், குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.
உயிரிழந்த முகமது ரோணி பனியன் தொழிலாளியாக வேலை செய்து கொண்டே, அந்நிறுவனத்துக்குத் தேவையான ஆள்களை வெளி மாநிலங்களிலிருந்து அழைத்து வந்து வேலைக்கு சேர்த்துவிடும் தொழிலாளர் ஒப்பந்ததாரராகவும் இருந்துள்ளார்.
இதேபோல மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த முகமது சைபிள் என்பவரும் மற்றொரு பனியன் நிறுவனத்தில் ஆள்களை வேலைக்குச் சேர்த்துவிடும் ஒப்பந்ததாரராகவும் இருந்துள்ளார். இருவருக்கும் ஏற்கெனவே தொழில் போட்டி இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முகமது யாசின் என்பவரை முகமதுரோணி தான் பணியாற்றும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். ஆனால், சில நாள்களிலேயே முகமதுசைபிள் மூலமாக, அவர் வேலை செய்யும் பனியன் நிறுவனத்துக்கு முகமதுயாசினை வேலைக்குச் சேர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதுகுறித்து கேட்டு முகமதுயாசினிடம், முகமதுரோணி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது முகமது சைபிளும் அங்கு வந்து முகமதுயாசினுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அப்போது மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், முகமது ரோணி, தகாத வார்த்தைகளால் முகமதுயாசினைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முகமதுயாசின் தான் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் முகமது ரோணியைக் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் காவல் துறையினர், மேற்கு வங்கதைச் சேர்ந்த முகமது சைபிள், முகமது யாசின் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.