புத்தகத் திருவிழாக்கள் சமுதாய மாற்றங்களை உருவாக்கும் என வழக்குரைஞர் அருள்மொழி பேசினார்.
உடுமலை புத்தகாலயம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் ஆகியன சார்பில் 7 ஆவது ஆண்டாக உடுமலையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
உடுமலை நகரில், தளி சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை 10 நாள்கள் இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியை ஒட்டி தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், சமூக ஆர்வலர்களும் சிறப்புரையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னல் புக் ட்ரஸ்ட் தலைவர் இரா.ஈஸ்வரன் தலைமை வகித்தார். மருத்துவத் துறை இணை இயக்குநர் மருத்துவர் எம்.தமிழ்மணி முன்னிலை வகித்தார். வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் வரவேற்றார். நூலக வாசக வட்டப் பொருளாளர் எஸ்.சண்முகசுந்தரம், வழக்குரைஞர் ஜா.சாதிக்பாட்சா உள்ளிட்ட பலர் பேசினர்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திராவிடர் கழகப் பிரசாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி "மானமும் - அறிவும்' எனும் தலைப்பில் பேசியதாவது:
கல்வி என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்று. கல்விக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் புத்தகக் கண்காட்சிகள் நடத்த வேண்டும். இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் மூலமாகத்தான் புதிய சமுதாய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். புத்தகங்களால் மட்டுமே உலகில் அனைத்து மாற்றங்களையும் சாத்தியப்படுத்த முடியும். புத்தகத் திருவிழாக்கள் மூலமாக அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும் என்றார்.
தோழன் ராஜா நன்றி கூறினார்.
வாசிப்பை நேசிப்போம்-கலந்துரையாடல்: உடுமலை கிளை நூலகம் எண் 2 இல் வாசிப்பை நேசிப்போம் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், வழக்குரைஞர் அருள்மொழி கலந்துகொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
அப்போது நூலக வாசகர் வட்டம் சார்பில் தென் கொங்கு நாட்டு விடுதலைப் போர் எனும் புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
நூலகர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.