விதிமுறைகளை மீறி செயல்படும் மண் குவாரிகளால் அவதி: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேவூர் அருகே விதிமுறைகளை மீறி செயல்படும் மண் குவாரிகளால்  விளைநிலங்கள் பாதிப்படைவதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

சேவூர் அருகே விதிமுறைகளை மீறி செயல்படும் மண் குவாரிகளால்  விளைநிலங்கள் பாதிப்படைவதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு,  ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை தேவை: இதுகுறித்து கொடுவாய்,  தெற்கு அவிநாசிபாளையம்,  செங்காட்டுப்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனு: 
எங்கள்  பகுதியில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.  விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியுள்ளது. எனவே, எங்கள் பகுதியில் சீராக குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பெருமாநல்லூர்,  காந்தி நகர் ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் அளித்த மனு:
எங்கள் பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர்த்  தட்டுப்பாடு உள்ளது.  தற்போது கோடைக் காலம் தொடங்கியிருப்பதால்,  கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி இருந்தும், எங்களுக்கு போதிய குடிநீர்  கிடைப்பதில்லை. இதுகுறித்து பெருமாநல்லூர் ஊராட்சியிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை  என மனுவில் தெரிவித்துள்ளனர். 
மண் குவாரிகளால் அவதி: அவிநாசி வட்டம்,  சேவூர் அருகே மங்கரசுவலையபாளையம், தண்ணீர்பந்தல், செல்வபுரம், பேரநாயக்கனூர் கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் மண் குவாரியால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.  கனரக வாகனங்கள் அன்றாடம் அதிக அளவில் சென்றுவருவதால்,  கிராம சாலைகள் பழுதடைந்துவிட்டன. 
  சிறுபாலங்களும் துண்டாகிவிட்டன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இரவு நேரத்தில் வெடி வைப்பதால் பொதுமக்கள்,  குழந்தைகள்  அஞ்சுகின்றனர்.  விதிமுறைகளை மீறி செயல்படும் இந்த குவாரியில் இருந்து வெளியேறும் கற்கள்  அருகில் உள்ள விளைநிலங்களில் விழுந்து விவசாயம் பாதிப்படைந்துள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.  கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.  
   வியாபாரிகளால் உழவர் சந்தை விவசாயிகள் பாதிப்பு: இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்த மனு: 
பல்லடம் உழவர் சந்தையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.  அன்றாடம் 200 விவசாயிகள்  பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.  சந்தை செயல்படும் நேரமான காலை 4.30 முதல் 8 மணி வரை வெளியே கடையை அமைத்து வியாபாரிகள் விற்பனை 
செய்வதால், விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் வெளியில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே,  விவசாயிகளின் நிலை கருதி சந்தைக்கு வெளியே உள்ள கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com