Enable Javscript for better performance
காங்கயம் அருகே மடவிளாகத்தில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காங்கயம் அருகே மடவிளாகம்  ஆருத்ர கபாலீஸ்வரர், ரகுபதி நாராயணப் பெருமாள் கோயில்களில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    காங்கயத்தை அடுத்துள்ள மடவிளாகத்தில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான ஆருத்ர கபாலீஸ்வரர், ரகுபதி நாராயணப் பெருமாள் கோயில்கள் உள்ளன. இங்கு பங்குனி மாதத்தில் தேர் திருவீதி உலா வரும். இங்குள்ள தேர் பழுதடைந்ததால் கடந்த 70 ஆண்டுகளாக தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய தேர் நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஆண்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 23-ஆம் தேதி கிராம் சாந்தி நிகழ்ச்சி, 24-ஆம் தேதி ஆருத்ர கபாலீஸ்வரர், ரகுபதி நாராயணப் பெருமாள் கோயில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24-ஆம் தேதி ஸ்ரீ சோமாஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி சமேத ஸ்ரீரகுபதி நாராயணப் பெருமாள் கருட வாகனத்திலும் திருவீதி உலா தொடர்ந்து நடைபெற்றது. 29-ஆம் தேதி ஸ்ரீ சோமாஸ்கந்தர் மற்றும் ஸ்ரீதேவி சமேத ஸ்ரீரகுபதி நாராயணப் பெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
     அதிகாலை 5 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு மஹா அபிஷேகமும், காலை 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத் தேர்களுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற 
    நீதிபதி க.கல்யாணசுந்தரம், மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அ.பாரி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்துத்  தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    இதில், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் தேர், ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீரகுபதி நாராயணப்பெருமாள் தேர், ஸ்ரீ கணபதி தேர், ஸ்ரீ பிரகலநாயகி அம்மன் தேர் என நான்கு தேர்கள் முன்னால் செல்ல பெரிய தேரில் ஸ்ரீ சோமாஸ்கந்தர் உலா வந்தார்.  ஒரு கிலோ மீட்டர் தொலைவு வலம் வந்த தேர் மாலை 6.30 மணிக்கு நிலையை அடைந்தது.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai