தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் 60 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் விநியோகம்: தமிழ்நாடு விதைச் சங்கம் தகவல்

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டு உற்பத்தி

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட   60 ஆயிரம் மெட்ரிக் டன்  விதைகள்  விநியோகிக்கப்பட்டுள்ளன என  தமிழ்நாடு விதைச் சங்கத்தின் மாநில செயலர் சி.காளிதாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பட்டங்களுக்கு முழு அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை உரிய கால கட்டத்தில் தொடங்காத காரணத்தால் நெல் விதைப்பு காலதாமதம் ஆகிறது. நவம்பர் மாதம் பருவ மழை துவங்கும் பட்சத்தில் ஏற்படும் விதைத் தேவையை ஈடுகட்ட போதுமான அளவு சான்று விதைகள் கையிருப்பில் உள்ளன. இதனால் தமிழகத்தில் விதை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
சந்தை தேவை மற்றும் அரிசி பயன்பாடு குறைவு காரணமாக நெல் உள்ளிட்ட தண்ணீர் தேவை அதிகம் கொண்ட  பயிர்களைப் பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டுவது விதைச் சந்தை வர்த்தகத்தை பாதிக்கும் காரணியாகும். ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு காரணமாக வெளிச் சந்தை விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதால் நெல் விலை உயர்வு போதுமான அளவு விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.
நடப்பு நிதியாண்டில் சான்றளிப்புத் துறையால் எதிர்பார்க்கப்படும் விதைப் பண்ணை பரப்பு எட்டப்பட்டுவிடும்.
விதைப் பண்ணை பதிவு மற்றும் விதை சுத்தி பணிகள் பெருமளவில் உள்ள வருவாய் மாவட்டங்களில் சான்றளிப்புத் துறை  அலுவலகங்கள் தொடங்கப்படாத நிலை விதை விநியோகத்தில் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 
சான்றளிப்புத் துறை உள்ளிட்ட வேளாண் துறையில் பெருமளவில் காலிப் பணியிடங்கள் உள்ளதை ஏற்கெனவே வேளாண் துறைக்கு சுட்டிக்காட்டியுள்ளோம். முன்னுரிமை துறையான வேளாண் துறையை முழு அளவிலான அலுவலர்களைக் கொண்டு நிர்வகிக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். 
நடப்பு பயிர் ஆண்டில் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கும், வெளிச் சந்தை விலைக்கும் உள்ள இடைவெளி விதை வர்த்தகத்தை பாதிக்கக் கூடிய அம்சமாகும். மாநில அரசு தொடர்ந்து உயர் விளைச்சல் விருதான கிருஷி கர்மான் விருதை பெற்றதற்கு வேளாண்மை பல்கலைக்கழக ரகங்களும், விதை சான்றளிப்பு துறையும், அதனை பெருக்கம் செய்யும் விதை உற்பத்தி நிறுவனங்களுமே காரணமாகும். 
தொடர்ந்து விதைச் சான்று நடைமுறைகளைப் பின்பற்றி தரமான விதைகளை விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையில் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்ற வேளாண் துறையின் உயரிய கொள்கைகளை நடைமுறைப்படுத்திட விதை சங்கம் பாடுபடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com