உடுமலை நகராட்சியில் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் உயர்வு

உடுமலை நகராட்சியில் சொத்து வரி மற்றும் குடிநீர்க் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

உடுமலை நகராட்சியில் சொத்து வரி மற்றும் குடிநீர்க் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சொத்து வரி, குடிநீர்க் கட்டணங்களை 50 முதல் 100 சதவீதம் வரை நகராட்சி நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இது, பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சொத்து வரி உயர்வு:
உடுமலை நகராட்சி ஏ, பி, சி, என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் "ஏ' மண்டலத்துக்கு சதுர அடிக்கு ரூ. 1.55 பைசாவில் இருந்து ரூ. 2.48 பைசாவாகவும், "பி' மண்டலத்துக்கு ரூ. 1.05 பைசாவில் இருந்து ரூ. 1.68 பைசாவாகவும், "சி' மண்டலத்துக்கு 80 பைசாவில் இருந்து ரூ. 1.28 பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
இந்த வரி உயர்வு 2018 ஏப்ரல் 1ஆம் தேதியில் அமலுக்கு வந்துள்ளது. இது, ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த வரியை காட்டிலும் 50 முதல் 100 சதவீதம் வரை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. 
குடிநீர்க் கட்டணம் உயர்வு:
உடுமலை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மொத்தம் 7 ஆயிரம் வீட்டு இணைப்புகளும், 3 ஆயிரம் வணிக ரீதியான இணைப்புகளும் உள்ளன. இதில் வீட்டு இணைப்புகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 60இல் இருந்து ரூ. 120ஆகவும், வணிக ரீதியான இணைப்புகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 120இல் இருந்து ரூ. 240ஆகவும் உயர்தப்பட்டுள்ளது. இது, ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த கட்டணங்களைக் காட்டிலும் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குப்பை வரி:
இந்தக் குப்பை வரி என்பது இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது வீடுகளுக்கு வருடத்துக்கு ரூ. 120 முதல் ரூ. 600 வரை விதிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு வருடத்துக்கு ரூ. 1,200 முதல் ரூ. 3,000 ஆயிரம் வரை குப்பை வரி போடப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சொத்து வரி இரு மடங்காகவும், குடிநீர்க் கட்டணம் இரு மடங்காகவும் உயர்த்தப்பட்டிருப்பதும், புதிதாக குப்பை வரி விதிக்கப்பட்டிருப்பதும் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

பொதுமக்கள் அதிருப்தி
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: விலைவாசி உயர்வால் பொது மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் திடீரென சொத்து வரி, குடிநீர்க் கட்டணங்களை இரு மடங்காக உயர்த்தியதன் மூலமாக உடுமலை நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மீது திட்டமிட்டு சுமைகளைத் திணித்து வருகிறது. ஏற்கெனவே நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு மிக அதிகபட்சமாக வாடகை வசூலித்து வரும் நிலையில் வியாபாரிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். 
தற்போது சொத்து வரியை இரு மடங்காக உயர்த்துவதால் வணிக நிறுவனங்களில் உள்ள கடைகள், வீடுகளுக்கும் வாடகையும் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. பொதுவாக சொத்து வரி இரு மடங்காகவும், குடிநீர்க் கட்டணங்கள் இருமடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோக ஒவ்வொரு வீடுகளுக்கும், குப்பைக்கென தனி வரி விதித்து பொதுமக்களை நகராட்சி நிர்வாகம் வாட்டி வதைத்து வருகிறது என்றனர்.


நகராட்சி ஆணையர் விளக்கம்
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராம் கூறியதாவது: சொத்து வரி, குடிநீர்க் கட்டணங்கள் உயர்வு மக்களை பாதிக்கும் என்பது உண்மைதான். ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை. கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. அதுவும் குறைந்த அளவில்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக உயர்த்தப்பட்ட வரியில் பொதுமக்களுக்கு ஆட்சேபணை இருந்தால் 30 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக நகராட்சியில் தெரிவிக்கலாம்.  
அதேபோல உடுமலை நகராட் சியில் புதிதாக குடிநீர்த் திட்டம் போடப்பட்டுள்ளது. இதை யொட்டி குடிநீர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மின் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவைக்கு கட்டணங்கள் செலுத்துவது மற்றும் அலுவலர்களின் சம்பளம் என நிர்வாகத்தை நடத்த எங்களுக்குப் பல வகைகளில் செலவினம் அதிகரித்து வருகிறது. எனவேதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com