புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து: ஆட்சியர் எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்  என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்  என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: 
நிகோட்டின் கலந்த புகையிலைப் பொருள்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல், விநியோகம் செய்தல், வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றைத் தடை செய்து தமிழக அரசு கடந்த மே 23ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சேமித்து வைத்தல், விநியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 
அதன்படி, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் விற்பனை, விநியோகம் செய்பவர்களைக் கண்டறிந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006இன்படி அவற்றைப் பறிமுதல் செய்து, உணவு மாதிரி எடுத்து, அதன் அடிப்படையில் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றம் மூலமாக உரிய தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவிப்பின்படி பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் ஸ்பூன், பிளாஸ்டிக் பேப்பர் ஆகியவற்றை உணவகங்கள், இறைச்சிக் கடைகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என ஹோட்டல் மற்றும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வுக் கூட்டத்தின் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும், ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களது  ஹோட்டல்களில் பார்சல் வாங்க வரும் மக்கள் பாத்திரங்கள் கொண்டு வந்து வாங்கினால் பில் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளளனர். 
அதேபோல இறைச்சிக் கடைகளில் பாத்திரம் கொண்டு வந்து இறைச்சி வாங்கினால் பில் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என இறைச்சிக் கடை உரிமையாளர்களும் உறுதி அளித்துள்ளனர்.  எனவே, பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருள்களின் பயன்பாட்டை உடனடியாக முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
திருப்பூர் மாவட்டத்தில் 20,162 உணவு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 19,004 பேர் உரிமம், பதிவு பெற்றுள்ளனர். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவு பெற்ற பின்னரே உணவுத் தொழில் புரிய வேண்டும். அவ்வாறு  உரிமம், பதிவு பெறாதவர்கள் மீது பிரிவு 63, 55இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உணவுப் பாதுகாப்புத் துறையில், உணவின் தரம், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது, கலப்பட டீ தூள், போலி குடிநீர் நிறுவனங்கள், கலப்படம் மற்றும் போலி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை குறித்து 94440 42322 எனும் கட்செவி அஞ்சல் எண்ணுக்குப் புகார் தெரிவிக்கலாம். 
அதன்மீது 24 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com