சாதனைகளைக் கூறி வாக்குகள் சேகரிக்கிறோம்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
By DIN | Published On : 01st April 2019 08:55 AM | Last Updated : 01st April 2019 08:55 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சாதனைகளைக் கூறி பொதுமக்களிடம் வாக்குச் சேகரிக்கிறோம் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து உடுமலை நகரில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்க அதிமுக அரசு உத்தரவிட்டது. ஆனால், திமுகவினர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்குத் தடை வாங்கிவிட்டனர். ஆகையால், அந்தத் தொகையை வழங்க முடியவில்லை. மக்களவைத் தேர்தல் முடிந்ததும் உடனடியாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். பொள்ளாச்சித் தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றார்.
உடுமலை நகரின் மேற்கு பகுதியில் உள்ள 13 ,14 வார்டுகளில் பொதுமக்களிடம் அமைச்சர் வாக்குகள் சேகரித்தார்.
மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன், நகர நிர்வாகிகள் ஹக்கீம், மணிவிலாஸ் பொன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.