ஜி.எஸ்.டி.யால் ஜவுளித் தொழில்கள் முடக்கம்: டி.டி.வி.தினகரன்

ஜி.எஸ்.டி.யால் பின்னலாடை, ஜவுளி, விசைத்தறி தொழில்கள் முடங்கியுள்ளதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி.யால் பின்னலாடை, ஜவுளி, விசைத்தறி தொழில்கள் முடங்கியுள்ளதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வத்தை ஆதரித்து பெருமாநல்லூரில் திங்கள்கிழமை திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
மக்களவைத் தேர்தல் முடிவடைந்தவுடன் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். தமிழர்களை வஞ்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளை தோற்கடிக்க வேண்டும். இதேபோல தமிழர்களை வஞ்சித்த காங்கிரஸ், திமுகவும் ஒரு ஏமாற்றுக் கூட்டணி.
 தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. ஆனால், ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக கூறி அவர் தடை செய்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார்கள்.
ஜி.எஸ்.டி.யால் பின்னலாடை, ஜவுளி, விசைத்தறி என அனைத்து தொழில்களும் பாதிப்படைந்துள்ளன. டாலர் சிட்டி என திருப்பூரை அழைப்பார்கள். தற்போது, திருப்பூர் தொழில் துறையினர் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். 18 சதவீத வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் மட்டுமின்றி மோட்டார் உற்பத்தியாளர்கள் தொழில் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உண்மையான ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் அமமுக வுக்கு வாக்களிக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி இல்லை. எங்களை வெற்றி பெறச் செய்தால் அடிப்படை வசதிகள், நின்று போன மேம்பாலப் பணிகளை நிறைவேற்றுவோம்.
மத்திய அரசிடம் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டார்கள். கேரள மாநிலம், வயநாட்டில் ராகுல் காந்தி வேட்பாளராக நிற்க கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து, வேறு வேட்பாளரை நிறுத்துகிறது. ஆனால், தமிழகத்தில் கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு வாக்களித்தால் அவர்கள் எப்படி தமிழர்களின் நலனைப் பாதுகாப்பார்கள்? கர்நாடகா, கேரளத்தில் அணை கட்டினால் கேட்க மாட்டார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வரவேண்டும் என்றார்.
 இப் பிரசாரத்தின்போது அமமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, முன்னாள் மேயர் விசாலாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூரில்...:  முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றி முஸ்லிம் மக்களை மோடி கவலையில் ஆழ்த்தியுள்ளார். 
 கருப்புப் பணத்தையும் ஒழித்ததாகத் தெரியவில்லை. முஸ்லிம், கிறிஸ்தவர்களிடம் மதக் கலவரத்தை உண்டாக்க பாஜக முயற்சி செய்கிறது. பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை. 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கப் பார்க்கிறார். ஒருபக்கம் ராகுலை ஆதரித்துக் கொண்டு மம்தாவையும் சந்தித்துப் பேசுகிறார் என்று குற்றம்சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com