ஏழை விவசாயிகள் வங்கிகளில் அடகு வைத்துள்ள 5 பவுன் நகைகள் மீட்டுத் தரப்படும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஏழை விவசாயிகள் வங்கிகளில் அடகு வைத்துள்ள ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை (5 பவுன்) உள்ள நகைகளை மீட்டுத்

ஏழை விவசாயிகள் வங்கிகளில் அடகு வைத்துள்ள ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை (5 பவுன்) உள்ள நகைகளை மீட்டுத் தருவதோடு அவர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருப்பூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு ஆதரவு திரட்டிப் பேசியதாவது: 
அரசியல் மாற்றத்துக்குப் பெயர் பெற்ற ஊர் திருப்பூர். தமிழகத்தில் நடக்கும் அக்கிரம ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்.
தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை: தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு கையில் வைத்துள்ளது. மோடிக்குப் பின்னால் சென்றால் தேர்தல் ஆணையம் பல்வேறு விளைவுகளைக் சந்திக்க வேண்டிவரும். 
தேர்தலை நிறுத்த சதி: துரைமுருகன் வீட்டில் அதிகாரிகளே பணத்தை வைத்துவிட்டு திட்டமிட்டு செயல்படுகின்றனர். குடியாத்தம், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கு திமுக வெற்றி பெற்றால் பெரும்பான்மையை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் வருமான வரித் துறை மூலம் சோதனை நடத்தி இந்த இரு இடங்களிலும் தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி சதி செய்து வருகிறது.
திருப்பூருக்கு 2014இல் வந்த மோடி, பனியன் வர்த்தகத்தை ஒரு லட்சம் கோடியாக உயர்த்துவதாகக் கூறினார். ஆனால் இப்போது திருப்பூரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இப்போது தேர்தல் பிரசாரத்துக்கு வந்த மோடி இதைப்பற்றி ஏதாவது கூறினாரா? தமிழ்நாட்டை மோடியும், எடப்பாடியும் நாசமாக்கிவிட்டனர். 
மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொழிலாளர்களையும், தொழில் செய்பவர்களையும் நசுக்கிவிட்டது. நான்கு கோடி பேர் வேலையை இழந்துள்ளனர்.  ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்களை முடக்கியவர் மோடி.  அதனால்தான் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் "கோ பேக் மோடி' என்று சொல்கிறார்கள். 
இப்போதைய தேர்தல் அறிக்கையில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் ஜிஎஸ்டியில் சில திருத்தங்கள் கொண்டு வருவோம், நலிவடைந்த தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுப்போம் என்கின்றனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அவர்கள் போலியான அடிக்கல் நாட்டு விழா நடத்தியுள்ளனர். இதை நாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் 10 ஆம் வகுப்பு படித்த ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை அளிக்கப்படும். கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும், நிலமற்ற ஏழை விவசாய கூலித் தொழிலாளர்கள் தங்கள் குடும்பச் செலவுக்காக கூட்டுறவு வங்கி, பொதுத் துறை வங்கியில் அடமானம் வைத்துள்ள ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை  (5 பவுன்)  உள்ள தங்க நகைகளை மீட்டுத் தருவதோடு, கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்படும். 
10 லட்சம் மகளிருக்கு மக்கள் நலப் பணியாளர்கள் பணி வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். முதியோர் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரயிலில் செல்ல சலுகை வழங்கப்படும். 
மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும்.  அப்போது மக்களின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்து வைப்போம். கொடநாடு பிரச்னை, ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான கொலையாளிகளை சிறையில் தள்ளுவதுதான் எங்கள் முதல் வேலை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com