நமது எம்.பி. என்ன செய்ய வேண்டும் 

இந்தியாவின் பின்னலாடை தலைநகராக திருப்பூர் திகழ்ந்தாலும் அதற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்தியாவின் பின்னலாடை தலைநகராக திருப்பூர் திகழ்ந்தாலும் அதற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆகவே, திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவது அடுத்து வரும் மக்களவை உறுப்பினரின் முதல் கடமையாகும். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் மக்களவையில் பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சிக்காக குரல் கொடுக்க வேண்டும். 
திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வகையில் பின்னலாடை வாரியம் அமைத்தாலே மத்திய அரசின் முழுப்பார்வையும் திருப்பூரை நோக்கித் திரும்பும். 
மேலும், பின்னலாடைத் தொழிலுக்கு என்று பிரத்தியோகமான ஆராய்ச்சிக் கூடத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
 லட்சக்கணக்கான தொழிலாளர்களை வாழவைத்துக் கொண்டுள்ளதால், தொழிலாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.
ராஜா எம்.சண்முகம் தலைவர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்.

பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். சாயத் தொழில் சார்ந்த அலுவலக பணியாளர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும். பூஜ்யநிலை பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வட்டியில்லாக் கடனை மானியமாக மாற்றிக் கொடுக்க வேண்டும். பூஜ்ய நிலை சுத்திகரிப்புத் திட்டமானது பின்னலாடைத் தொழில் சார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு உற்பத்தியாளர்கள், டையிங், பிளீச்சிங், எம்பிராய்டிங், காம்பேக்டிங், நிட்டிங், ரைசிங், பிரிண்டிங் ஆகிய சங்கங்களை ஒருங்கிணைத்து நலவாரியம் அமைக்க வேண்டும். பூஜ்ய நிலை பொதுசுத்திகரிப்பு திருப்பூரில் மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதை அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்த புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
எஸ்.நாகராஜன் தலைவர் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள்  சங்கம்.

திருப்பூர் மக்களவை உறுப்பினர் தலைமையில் பின்னலாடைத் தொழில் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதில், ஏற்றுதியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள், சாய ஆலைகள் சங்கம், நிட்டிங், பிரின்டிங், ஜாப் ஒர்க் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தொழில் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
 கூட்டமைப்பு வாயிலாக தொழிலுக்கான தேவைகளைக் கண்டறிந்து மத்திய அரசிடம் அதை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். இதுவரையில் இருந்த மக்களவை உறுப்பினர்கள் தொழில் துறையைப்பற்றி தெரியாமலும், கண்டுகொள்ளாமலும் இருந்ததால் தான் தற்போது நலிவடைந்துள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனைக்கு டிஜிட்டல் முறையில் மட்டுமே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்த வேலையும் செய்யவில்லை. ஆகவே, தொழிலாளர்கள் நலனைக் கருதி இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும்.
எம்.பி.முத்துரத்தினம் தலைவர் திருப்பூர் ஏற்றுதியாளர்கள் மற்றும்  உற்பத்தியாளர்கள் சங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com