வாக்குச் சீட்டுகளை விரைவாக வழங்க ஆட்சியர் உத்தரவு
By DIN | Published On : 14th April 2019 04:31 AM | Last Updated : 14th April 2019 04:31 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சீட்டுகளை விரைவாக வழங்குமாறு களப் பணியாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு மக்களவைத் தேர்தலை ஒட்டி புகைப்படம் மற்றும் முழுவிவரத்துடன் கூடிய வாக்குச் சீட்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அன்னை சத்யா நகர், காங்கேயன் நகர் பகுதிகளில் வாக்குச் சீட்டு வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவரும், ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆயவு செய்தார்.
மேலும், வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகளை வழங்கிய அவர் பணிகளை விரைந்து முடிக்குமாறு களப்பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட படியூர் முத்தாளம்மன் கோவில் வீதியில் வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகள் வழங்கும் பணியை ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் க. சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.