கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் பலி

திருப்பூரில் சாய சலவை ஆலையில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் 4 பேர் விஷ வாயு தாக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.


திருப்பூரில் சாய சலவை ஆலையில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் 4 பேர் விஷ வாயு தாக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த மோனகாளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (47), இவர் திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையம் பகுதியில் 6 ஆண்டுகளாக சாய சலவை ஆலை நடத்தி வருகிறார்.
இவரது ஆலையில் அஸ்ஸாம் மாநிலம், கச்சார் மாவட்டம் பத்தரி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.தில்வார் உசேன் (20), இவரது சகோதரர் எஸ்.அன்வர் உசேன் (26), கே.அன்வர் உசேன் (20), அபிதுர் ரகுமான் (20) உள்ளிட்ட 10 பேர் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். 
 இந்த நிலையில், சலவை ஆலையில் துணிகளுக்கு சாயம் ஏற்றிய பின்னர் அந்தக் கழிவு நீரை சேமித்து சுத்திகரிப்பு செய்வதற்காக சுமார் 15 அடி ஆழம் கொண்ட மூன்று தொட்டிகள் உள்ளன. 
இந்தத் தொட்டியில் இருந்த கழிவு நீரை அகற்றும் பணியில் நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, முதலில் உள்ளே சென்ற ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற ஒன்றன்பின் ஒன்றாக மூன்று பேரும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.
 இதில், விஷவாயு தாக்கியதில் அபிதுர் ரகுமான் மற்றும் எஸ்.அன்வர் உசேன், கே.அன்வர் உசேன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தில்வார் உசேனை சக தொழிலாளர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வருவாய்  கோட்டாட்சியர் செண்பகவள்ளி, மாநகர காவல் துணை ஆணையர் இ.எஸ்.உமா  ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் உயிரிழப்பா?
கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்தும்போது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிய வேண்டும். ஆனால், எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தொழிலாளர்கள் கயிறு கட்டி உள்ளே இறங்கி கழிவுகளை வெளியேற்றியுள்ளனர். இதனால் விஷவாயு தாக்கியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விடுமுறை நாள்களில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாய  ஆலைகளில் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com