சுடச்சுட

  

  உடுமலையை அடுத்துள்ள கணியூரில் கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர். 
  திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் கணியூர் மதி நகர் பகுதியில் அப்துல் மாலிக் என்பவருக்குச் சொந்தமான கிணறு உள்ளது. 40 அடி உயரம் உள்ள இந்தக் கிணற்றில் 30 அடிக்கு மேல் தண்ணீர் இருந்துள்ளது. இந்நிலையில், இந்தக் கிணற்றில் ஜீவானந்தம் (11), அஜய் (9), சந்தோஷ் (12) ஆகிய மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர்.
  ஆனால், குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயரிழந்திருக்கலாம் என அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது.
  இதையடுத்து, உடுமலை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்கு பிறகு அஜய், சந்தோஷ் ஆகிய இரண்டு சிறுவர்களின் சடலங்களைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.மேலும், கிணற்றின் அடியில் சேறும் சகதியும் நிறைந்து இருந்ததால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறுவர்களை மீட்பதில் அலட்சியம் காட்டுவதாகக் கூறி சிறுவர்களின் உறவினர்கள் மடத்துக்குளம்-தாராபுரம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இதைத் தொடர்ந்து, தாராபுரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் ஜீவானந்தம் உடலை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 
  இதற்கிடையில், மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மற்றொரு சிறுவனின் உடல் மட்டும் மீட்கப்படாததால் பொதுமக்கள் இரவு வரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
  இது குறித்து போலீஸார் கூறியதாவது: கணியூர் மதியழகன் நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் அஜய். பள்ளி விடுமுறை காரணமாக அவரது வீட்டுக்கு பொள்ளாச்சி வேட்டைகாரன்புதூரைச் சேர்ந்த அர்ச்சுணன் மகன் ஜீவானந்தம், தாராபுரம் பரமசிவம் மகன் சந்தோஷ் ஆகியோர் வந்துள்ளனர்.
  இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை 3 பேரும் அப்துல் மாலிக் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். கிணற்றின் அடியில் சேறும் சகதியும் அதிகமாக இருந்ததால் சிறுவர்கள் அதில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai