சுடச்சுட

  

  விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலைக்கு சீல்

  By DIN  |   Published on : 16th April 2019 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பூரில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழக்க காரணமான சாய சலவை ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர். 
  கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்குச் சொந்தமாக திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையத்தில் சாய சலவை ஆலையை உள்ளது. இந்த ஆலையில் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
  இந்நிலையில், சாய சலவை ஆலையில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
  அப்போது, கழிவுநீர்த் தொட்டிக்குள் முதலில் இறங்கிய தொழிலாளி விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். இதையடுத்து, அவரைக் காப்பாற்ற அடுத்தடுத்து கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய மூவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
  இதில் அஸ்ஸாம் மாநிலம், கச்சார் மாவட்டம் பத்தரி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.தில்வார் உசேன் (20), அவரது சகோதரர் எஸ்.அன்வர் உசேன் (26), கே.அன்வர் உசேன், அபிதுர் ரகுமான் (20) ஆகியோர் உயிரிழந்தனர்.
  இதையடுத்து, ரசாயனக் கழிவுகள் சேகரிக்கும் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொட்டிக்குள் இறங்கியதே உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி சாய சலவை ஆலை உரிமையாளர் ஜெயகுமார் மீது வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
  இதைத்தொடர்ந்து, 4 தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான சாய சலவை ஆலையின் மின் இணைப்பைத் துண்டித்து, ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தவரவிட்டது. இதையடுத்து, திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆலையின் மின் மின் இணைப்பைத் துண்டித்து திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai